முக்குலம்


Join the forum, it's quick and easy

முக்குலம்
முக்குலம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ராஜராஜன்

Go down

ராஜராஜன் Empty ராஜராஜன்

Post  Admin Thu Jul 01, 2010 8:45 am

சோழ மாமன்னர்களில் மங்காத கீர்த்தி கொண்டவன் ராஜராஜ சோழன். சிறந்த சிவபக்தனான இவன், சோழ நாடு முழுவதையும் அளந்து கணக்கிட்டு, தற்போதைய நில அளவை முறைக்கு முன்னோடியாக இருந்தவன். தமிழ் வேதமாகிய தேவாரத்தை, தில்லைவாழ் அந்தணரி டமிருந்து மீட்டு உலகுக்கு அளித்தவன். இத்தனைக்கும் மேலாய் இன்றளவும் முற்கால தமிழக கட்டடக் கலைக்கு சான்றாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயிலை கட்டியவன்.

இத்தனை பேரும் புகழும் கொண்ட மன்னனின் எல்லா செயல்களுக்கும் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் சான்றாக இருக்கின்றன. ஆனால், அவர் இறந்த 1014 ம் ஆண்டு அவரது உடல் புதைக்கப்பட்டதா, எரிக்கப் பட்டதா, அது எங்கே நடந்தது என்பது போன்ற கேள்விகள் காலத்தின் இருண்ட பக்கங்களில் காணக் கிடைக்காமலே இருந்தன. இப்போது இந்த விஷயத்தில் சிறு வெளிச்சம் விழுந்திருக்கிறது.



‘கும்பகோணம் பட்டீஸ்வரம் பக்கம் இருக்கிற உடையாளூர் என்ற ஊரில்தான் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடம் இருக்கிறது’ என்றொரு தகவலைத் தன் ஆராய்ச்சியின் மூலம் வெளியுலகுக்கு அறிவித்திருக்கிறார், கும்பகோணத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் சேதுராமன். இவரது இந்த அறிவிப்பு, மற்றவர்களாலும் நிபந்தனையுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, தமிழக அரசு அறநிலையத்துறையின் திருக்கோயில்கள் சீரமைப்பு ஆலோசனைக் குழுவின் உயர்மட்ட உறுப்பினரான போரூர் சாந்தலிங்க அடிகளார், ‘‘ராஜராஜ சோழனின் சமாதி இருக்கும் இடத்தில் மணிமண்டபம் கட்டுவதற்கும், சோழனின் பெருமைகளைப் பறைசாற்றும் வண்ணம் இங்கு அமைந்திருக்கும் வரலாற்று நினைவிடங்களை ஒருங்கிணைத்து சுற்றுலாத் தலமாக அறிவிக்கவும் அரசிடம் பரிந்துரை செய்வோம்’’ என்று அறிவித்திருக்கிறார்.

கும்பகோணத்தில் இருந்து ஆறாவது கிலோமீட்டரில் இருக்கும் உடையாளூர் கிராமத்துக்குச் சென்றோம். பச்சைப் பசேலென்று கண்களுக்குள் குளிர்ச்சியை அள்ளித் தெளிக்கிறது அந்தக் கிராமம். சின்ன சந்தில் உள்ள குடிசை வீட்டுக்கு போய் ‘ராஜராஜன் சமாதி’ என்று கேட்டால் குடிசையில் இருக்கும் பெரியவர் பக்கிரிசாமி அந்த வீட்டுக்குப் பின்னால் இருக்கும் வாழைத் தோப்புக்குள் அழைத்துச் செல்கிறார். அங்கே ஓரிடத்தில் ஒரு பெரிய சிவலிங்கம் தெரிகிறது. அதற்கு எதிரே விளக்கேற்ற ஒரு மாடம் தெரிகிறது. அதைக் காட்டி இதுதான் என்கிறார் பெரியவர்.

கிராமத்தில் இருக்கும் வயோதிக சிவாச்சாரியாரான வைத்தியநாதர் என்பவர், ‘‘கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சேதுராமன் மைசூரில் வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு படிகளைப்
பார்த்தபோது, இங்குள்ள பெருமாள் கோயிலில் முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு ஒன்று இருப்பதையும் அதில் ராஜராஜ சோழன் எழுந்தருளி இருக்கும் நினைவு மண்டபம் சிதிலமடைந்து இருந்ததாகவும் அதை சரிசெய்ததாகவும் பொறிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்திருக்கிறார். உடனே இங்கு வந்து பெருமாள் கோயிலை ஆய்வு செய்தார். அப்போதுதான் ராஜராஜன் நினைவுமண்டபத் தூண் இருக்கும் விஷயமே வெளியில் தெரிந்தது. அதற்குப் பிறகு குடவாசல் பாலசுப்ரணியமும் அவரும் அந்தத் தூணை தேடும்போதுதான், கிடைக்காமல் என்னிடம் வந்து கேட்டார்கள். பால்குளத்து அம்மன் கோயிலைப் புதுப்பிக்கும்போது, ஒரு தூண் தேவைப்பட்டதால் பெருமாள் கோயிலில் இருந்த அந்தத் தூணை அங்கே எடுத்துப்போய் வைத்து விட்டோம் என்றேன். உடனே அங்கு சென்று பார்த்தபோது அது ராஜராஜன் நினைவு மண்டபத் தூண் என்பதற்கான எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. இதைத் தொல்பொருள் துறையினரும் படியெடுத்து ஆவணமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் எல்லோரும் ராஜராஜன் நினைவிடம் இங்குதான் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டார்கள்’’ என்றார்.

ராஜராஜன் நினைவிடத்தில் குடிசைகட்டி வாழ்ந்து வரும் பக்கிரிசாமி ‘‘கோயில் இடமான இதில் எங்க அப்பா காலத்திலிருந்து குடியிருக்கிறோம். இரண்டு வருஷத்துக்கு முந்தி ஒருநாள் மழை பெஞ்சப்போ, இந்த இடத்துல திடீர்னு மண் உள் வாங்கிடுச்சு. அப்போ கொஞ்ச ஆழத்துக்கு மண்ணைத் தோண்டிப் பார்த்தேன். உள்ளே எண்கோண வடிவில் கட்டடம் போன்ற அமைப்பு இருந்தது. என்ன, ஏதுனு புரியாததால அதை அப்படியே மூடிட்டேன். இப்பதான் இது ராஜா சமாதின்னு தெரிஞ்சுகிட்டேன். அதற்கப்புறம் தினமும் கொஞ்சம் எண்ணெய் ஊத்தி விளக்குக் கொளுத்தி வைக்கிறேன்’’ என்றார்.

இந்த விஷயத்தில் அதிக அக்கறை காட்டி வரும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியனிடமும் இதுகுறித்துப் பேசினோம். ‘‘அந்த இடத்தில்தான் ராஜராஜ சோழன் சமாதி இருக்கும் என்பதை 100 சதவிகிதம் உறுதியாக சொல்லத்தகுந்த ஆதாரங்கள் இல்லைதான். ஆனால், அதுவாகத்தான் இருக்கும் என்பதற்கு 90 சதவிகித சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதைப்பற்றி பேசுவதற்குள் அதை சமாதி என்று சொல்வது தவறு. அவனது அஸ்தி வைக்கப்பட்டு, அதன்மீது எழுப்பப்பட்ட பள்ளிப்படை கோயிலாகவோ நினைவு மண்டப மாகவோகூட அது இருக்கலாம். அதனால் அதை நினைவிடம் என்று அழைக்கலாம். சோழ மன்னர்களின் குடும்பத்தினர் தஞ்சையில் அரசாண்டாலும் அவர்கள் வசிக்கும் மாளிகைகள் பழையாறையில்தான் இருந்தது. அதோடு ராஜராஜ சோழனின் மனைவியர்களில் ஒருவரான பஞ்சவன் மாதேவியினுடைய பள்ளிப்படை கோயில், பட்டீஸ்வரத்தில்தான் இருக்கிறது. அதனாலும் அந்த நினைவு மண்டபத் தூணாலும் அந்த இடம் ராஜராஜ சோழனின் நினைவிடம்தான் என்று உறுதியாக சொல்லலாம். கங்கைகொண்ட சோழபுரத்தையும், தஞ்சாவூரையும் அகழ்வாராய்ச்சி செய்ததைப் போல, இங்கும் மத்திய தொல்பொருள் துறை முழுவீச்சில் அகழாய்வு செய்தால், இன்னும் பல சரித்திர சான்றுகள் கிடைக்கும்’’ என்றார்.

சென்னையில் இருக்கும் தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறை அலுவலகத்தில் இதுகுறித்து விசாரித்தோம். ‘‘உடையாளூர் கோயில் கல்வெட்டில் ‘மகேஸ்வரதானம்’ என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது இறந்தவர்களுக்காகக் கொடுக்கப்படுவது. அதோடு ராஜராஜேஸ்வரம் என்ற கோயில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது ராஜராஜனுடைய அஸ்தி மேல் எழுப்பப்பட்ட கோயிலாக இருக்கலாம். அதோடு பால்குளத்து அம்மன் கோயிலில் இருக்கும் கல்வெட்டுத் தூணையும் பார்க்கிறபோது, அந்த இடம் ராஜராஜன் நினைவிடமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆனால், அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்வது சம்பந்தமாக தங்களிடம் திட்டம் ஏதும் இல்லை’’ என்றனர்.
& கரு.முத்து
சுட்ட இடம் http://heilderfuhrer.blogspot.com/2008/11/blog-post.html
https://www.youtube.com/watch?v=0GqmsZIwNkY&feature=related


Last edited by Admin on Sat Jul 10, 2010 9:44 pm; edited 1 time in total

Admin
Admin

Posts : 48
Join date : 20/06/2010

https://mukkulam.ace.st

Back to top Go down

ராஜராஜன் Empty Re: ராஜராஜன்

Post  Admin Thu Jul 01, 2010 9:10 am

மாமன்னன் இராஜராஜ சோழன் மணிமண்டபத்தையும் அமைத்து, அவரின் புகழ் உலகறியச் செய்ய வேண்டும். உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்துகிற தமிழக முதல்வர் அவர்கள் தஞ்சை மண்ணை ஆண்ட தமிழ் மன்னன் இராஜராஜ சோழன் நினைவிடத்தை பாதுகாக்க வேண்டும், தமிழக முதல்வர் செம்மொழி மாநாட்டிற்குள் ராஜராஜ சோழன் மணிமண்டபம் கட்டுவது குறித்து அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கவில்லை என்றால் வருகிற 28-06-2010 அன்று தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று கும்பகோணத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.


செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன்பாக டாக்டர் சேதுராமன் தலைமையில் சென்ற குழுவினர் பட்டீஸ்வரம் அருகில் உள்ள உடையாளூர் சென்று இராஜராஜ சோழன் சமாதி உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டனர்.


செய்தியாளர்களிட அவர் மேலும் கூறியதாவது:-

“தமிழக வரலாற்றில் மட்டுமல்லாமல் இந்திய வரலாற்றில் பெருமையாக கருதப்படுபவர் மாமன்னன் இராஜராஜசோழன். கி.பி.985ல் முடிசூடி 1014-வரை பொற்கால ஆட்சி புரிந்த மாமன்னன் இராஜராஜசோழன் தனது வெற்றிகளாலும், இன்றும் உலகமே வியக்கும் தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் சிவன் கோவிலை கட்டி
வரலாற்றில் இடம் பெற்றுள்ளான்.

இப்பெரு மன்னனின் சமாதி, குடந்தை அருகே பட்டீஸ்வரம் அருகிலுள்ள உடையாளூர் கிராமத்தில் புதைந்திருப்பதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

இராஜராஜ சோழன் பெரிய கோவிலை கட்டி முடித்ததும், “சிவபாத சேகரன்” என்ற பட்டத்தையும் பெற்றான். ஆகவே, சிவபாத சேகரன் அதாவது இராஜராஜன் இறுதி காலத்தில் அமரரான இடம் என்பதை குறிக்கும் வகையில் இந்த ஊருக்கு “சிவபாத சேகர மங்கலம்” என்ற பெயர் இருந்திருக்கிறது.

மாமன்னன் இராஜராஜ சோழனின் உடல் உடையாளூரில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதற்கு மற்றொரு ஆதாரம் இங்குள்ள “பால்குளத்தி அம்மன்” கோயிலின் முன்புறம் உள்ள கல்தூணில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள். இக்கல்வெட்டில் சிவபாத சேகர மங்கலத்தில் (இன்றைய உடையாளூர்) சிவபாத சேகர தேவர் (இராஜராஜ சோழர்) திருமாளிகை இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. இதைத்தவிர, 1927-28ல், அரசாங்கம் வெளியிட்ட கல்வெட்டு ஆய்வறிக்கையில் (Annual Report of Epigraphy 1927-28) இந்த இடத்தை “சமாதி கோவில்” அல்லது “பள்ளிப்படை” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த இடத்தின் வரலாற்றுச் சிறப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

உடையாளூர் செல்வ காளியம்மன் கோவிலுக்கு அருகே உள்ள வாழைத் தோப்பில் தான் சிறப்பு பெற்ற மாமன்னன் இராஜராஜ சோழனின் சமாதி புதைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சமாதியின் மேல்புறமுள்ள பெரிய லிங்கமும் இந்த இடத்தில் புதைந்துள்ளது. ஆகவே, இந்த இடத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் உதவியோடு அகழ்வாராய்ச்சி செய்து உலகப்புகழ் பெற்ற இராஜராஜ சோழனின் சமாதியை உடனடியாக வெளிப்படுத்த அரசு தீவிர முயற்சிக்க வேண்டும். இதே இடத்தில் மாமன்னன் இராஜராஜ
சோழன் மணிமண்டபத்தையும் அமைத்து, அவரின் புகழ் உலகறியச் செய்ய வேண்டும்” என டாக்டர் ந.சேதுராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக பொதுச் செயலாளர் ச.இசக்கிமுத்து, பழையாறை ஆய்வாளர் தங்கமுத்து, தேவர்இன கூட்டமைப்பு தலைவர் முத்துபாரதி, வட சென்னை மாவட்ட தவைவர் கே.எம்.சங்கரபாண்டியன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் விருதுள்ளார், தென் சென்னை மாவட்ட இணைச் செயலாளர் து.சண்முகவேல்பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்

சுட்ட இடம்: http://www.tamilkurinji.com/TN_news_index.php?id=11510



Last edited by Admin on Thu Jul 01, 2010 9:34 am; edited 1 time in total

Admin
Admin

Posts : 48
Join date : 20/06/2010

https://mukkulam.ace.st

Back to top Go down

ராஜராஜன் Empty Re: ராஜராஜன்

Post  Admin Thu Jul 01, 2010 9:28 am

பெரிய கோயில் என்று சிறப்பு பெயரோடு அழைக்கப்படுகிறது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில். இதன் சிறப்புகளைப் பற்றி அறிவோம்.

சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்ட ராஜ ராஜ சோழன், அவருக்கு பிரமாண்டமாக கோயில் அமைக்க நினைத்தான். அதன்படி எழுந்ததுதான் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில். இந்த கோயில் கட்டுவதற்கு வெளிமாநிலங்களில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டது.

கி.பி. 1004ல் கோயில் கட்டும்பணி ஆரம்பமா ஆறே ஆண்டுகளில் சிறப்பாக முடிந்து கி.பி. 1010ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பொதுவாக ராஜகோபுரம் உயரமாகவும், மூலஸ்தான விமானம் உயரம் குறைத்தும் கட்டப்படுவது வழக்கம். சோழர்களின் கட்டடக்கலை முறைப்படி, ராஜகோபுரம் சிறிதாகவும், விமானம் பெரிதாகவும் கட்டப்படுவது மரபாக இருந்தது. அதுபோல், தஞ்சாவூர் கோயில் விமானம் 216 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டது.

தலைசிறந்த கட்டடக்கலை வல்லுனர்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் விமானம் தமிழகத்திலேயே மிக உயரமானது. அதன் உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் 80 டன் எடையுள்ளது. இந்த கல்லை விமானத்தின் உச்சிக்கு கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் அருகிலுள்ள சாரபள்ளம் என்ற ஊர் (50 கி.மீ.)வரை மணல் கொட்டி, பாலம் போல் அமைத்து, யானைகளைக் கொண்டு, பிரம்ம மந்திரக் கல்லை கட்டி இழுத்து கொண்டு போய் கோபுரத்தின் உச்சியில் வைத்தார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான பணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டிருந்தார்களாம். இக்கோயிலின் அமைப்பைப் பார்த்து, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கட்டடக்கலை வல்லுனர்கள் வியப்பின் உச்சிக்குச் செல்கின்றனர்.

லிங்கங்களில் மிகப் பெரியது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம். இதனாலேயே இக்கோயில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுவதுண்டு.

மூலவர் பிரகதீஸ்வரர் அம்மன் பெரியநாயகியுடன் அருள் செய்கிறார். சிவலிங்கத்தில் பாணத்தின் உயரம் 12.5அடி. சுற்றளவு 23 அடி. ஆவுடையார் 55 அடி சுற்றளவு. இந்த லிங்கம், மத்தியபிரதேச மாநிலம், நர்மதா நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் உடுத்தும் வேட்டியின் நீளம் 35 மீட்டர். பக்தர்கள் வஸ்திரம் சாத்த விரும்பினால், இதற்கென ஆர்டர் கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்ய லிங்கத்தின் இருபுறமும் படிக்கட்டுகளுடன் கூடிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது அடி உயரமுடைய அம்மன் பெரியநாயகி நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருளுகிறாள்.

சோழர்களின் வெற்றிக்குரிய தெய்வம் துர்க்கை. இங்கு துர்க்கையின் தளபதியான வாராஹிக்கு சன்னதி உள்ளது. கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சன்னதி உள்ளது. சப்த மாதாக்களில் பிரதானமானவள் வாராஹி. ராஜராஜ சோழன் இந்த அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து விட்டுத்தான் எந்தச் செயலையும் ஆரம்பிப்பான்.

இத்தலத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் ராஜராஜ சோழன் விழா, இந்த அம்மனுக்கு பூஜை செய்த பின் தான் தொடங்குகிறது.

திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராஹி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.

பெரிய நந்தி: இங்குள்ள நந்தி 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 9 அடி அகலம், 25 டன் எடையுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இதை அமைப்பதற்காக திருச்சி அருகிலுள்ள பச்சைமலையிலிருந்து கல் கொண்டு வரப்பட்டது.

மூலவர் சன்னதியின் பின்புறம் கருவூர் சித்தருக்கு சன்னதி உள்ளது. கருவூர் சித்தர் இப்பகுதியில் தியானத்தில் இருந்துள்ளார். இவரது அறிவுரைப்படியே ராஜராஜ சோழன் இக்கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. தஞ்சை பெயர்க்காரணம்: புராண காலத்தில் தஞ்சகன், தாரகன், தண்டகன் என்ற மன்னர்கள், தங்களை யாராலும் வெல்ல முடியாது என்ற வரத்தை சிவனிடம் பெற்றிருந்தனர். இதனால் தேவலோகம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டி அதிகாரம் செலுத்தினர். வரம்பு மீறிய இவர்களின் செயல்கண்ட சிவன், திருமாலையும், காளியையும் அனுப்பி அவர்களை வதம் செய்தார். இருப்பினும், சிவபக்தர்களாக இருந்த அவர்களது பெயர் விளங்கும்படியாக, தஞ்சகனின் பெயரால் தஞ்சாவூரும், தாரகனின் பெயரால் தாராசுரமும், தண்டகனின் பெயரால் தண்டகம்பட்டு என்ற ஊரும் உருவானது.
சுட்ட இடம்: http://www.tamilvanan.com/content/page/158/?s=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D&nggpage=3

Admin
Admin

Posts : 48
Join date : 20/06/2010

https://mukkulam.ace.st

Back to top Go down

ராஜராஜன் Empty Re: ராஜராஜன்

Post  Admin Wed Jul 14, 2010 9:53 am


Admin
Admin

Posts : 48
Join date : 20/06/2010

https://mukkulam.ace.st

Back to top Go down

ராஜராஜன் Empty Re: ராஜராஜன்

Post  Admin Wed Jul 14, 2010 9:57 am


Admin
Admin

Posts : 48
Join date : 20/06/2010

https://mukkulam.ace.st

Back to top Go down

ராஜராஜன் Empty Re: ராஜராஜன்

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum